எல்லாமும் வழமைபோல்
இயங்கிக்கொண் டிருந்ததன்று!
எல்லோரும் தம்வீடு வாசல், கிடைத்தவேலை,
என்றிருந்தார்;
வாகனங்கள் மண்ணெண்ணை உண்டு …கரும்
வண்ணப் புகை பறிய வந்து போச்சாம்.
சைக்கிளிலே
அரைப்பனையை வெட்டி அடுக்கி
செக்குசுற்றும்
எருமைகள்போல் பாவியர்கள்
அன்று வாழ்க்கைச் சுமை இழுக்க,
குண்டு குழி வீதிக் குலுக்கல் பயணத்தில்
நன்மையொன்றாய் ….அன்றும் ஓர்
சுகப்பிரசவம் நிகழ,
எங்கும் அரூபவேலி இருந்த சிறை
வாழ்வினிலும்
மங்களம் அமங்கலம்
வழமைபோல் நடந்ததிங்கு!
மண்ணெண்ணை மருந்து பாணுக்கும்
நிதம் வரிசை;
சோடா, மின், பற்ரி அறியாத் தலைமுறைகள்;
பஞ்சு விளக்குப் படிப்பு;
பொழுதுபோக்கு
ஏதுமற்று டைனமோ
சுற்றிய இசைஇரவு;
என்று…கழிந்தநாளில்
இளம் பகலில் எங்கிருந்தோ
வந்து வெடித்துச் சிதறிற்றோர் எறிகுண்டு!
சின்ன நொடி திக்கே திகைக்க,
பெருமதிர்ச்சி
மூட, புகைந்த வெடிமருந்தின்
புழுத்த நாத்தம்
கூட, சாவோலம் குளறல் முனகலென
மேவிற்று அந்தரிப்பும் மிகுதுயரும்!
மறுகணமே
காயங்கள் பட்டவரை
கைதூக்கி சைக்கிள், வண்டில்
ஏற்றி விரைந்தார் எவரோ!
அடுத்தகுண்டு
காற்றைக் கிழித்துவந்து
யாரகணக்கைத் தீர்க்குமென
யார்க்கும் புரியாத…,
யமன் எம்மோடு வாழ்ந்த…,
நாளில்… சிலநிமிட நகர்வில்
ஊர் வளமை ஆச்சு!
இன்றை நினைக்கின்றேன்…
எங்கும் அமைதி மயம்.
குண்டு துவக்குவேட்டுக்
குலைக்கா சுக வாழ்வு.
என்ன குறை இங்கு? எல்லாமும் தாராளம்.
ஆனால் இவ் அமைதிக்குள்
ஆரூபமாய்க் கொடூரமாய்ச்
சூழும் அழிவிருந்து சுயத்தை மீட்டு,
நம் வாழ்வை
வாழ விழும்தடை வலையறுத்து,
வாழ்வை உடன்
சீராக்கத் தெரியாமல்
திகைக்குது ஏன் நம் சமூகம்?