வாழும் குரல்…..

இனிய குரல்வளத்தின் அதிஉச்ச எல்லையிது!
கனக்கக் குரல் உளது
கந்தர்வக் குரல் உனது!
உணர்ச்சிகள் சகலதிற்கும் ஏற்ப உருமாறி
கணக்கற்ற பாவங்கள்
காட்டும் குரல் நினது!
ஈடு இணையற்று இதயங்களை ஈர்த்து…பதி-
லீடு செய்ய முடியாத
இளமை குன்றாக் குரல் நினது!
‘பாடும் நிலா’ என்ற பட்டத்தில் எனக்கு உடன்
பாடில்லை;
தோற்றத்தில் ‘பெளர்ணமி நிலா’ எனினும்
யாரிடமும் கடன் வாங்கி ஒளிராது
ஒலிக்கின்ற
ஞானச் சுயம்பாக
நாளெல்லாம் இசைத்ததாலே
‘பாடுகிற சூரியன்’ நீ
பகலில் மட்டும் அல்ல…இராவில்
கூடக் குரல்கொடுக்கும்
குளிர்ந்த குரல் சூரியன் நீ!
பாஷை பதினைந்தில் பாடிய இசைக்குயில் நீ!
மீசை தலை நரைத்தும்
குரல் நரைக்காப் புதுக்குயில் நீ!
தன்னைத் தினந்தாழ்த்தி,
தனைச்சூழ்ந்தோரை வாழ்த்தி,
தன் பெருமை பேசாது
பிறர்பெருமை தனைப் புகழ்ந்த
பண்பின் சிகரம் நீ!
பளிச்சிடும் கற்களுக்குள்
உண்மையான வைரம் நீ!
ஒரு ஐம்பது ஆண்டு
விண்ணில் நீ விதைத்த இசை விதை
முளைத்துப் பல விருட்சம்
என்றாகித் திசைகளினை
என்றென்றும் தாலாட்டும்!
இன்றுதான் முதன்முதலாய் உயிரற்று நீ இருக்க
இன்னும் உயிர்ப்போடு உன் பாட்டு….
உன் இழப்பின்
துன்பத்தைக் கண்ணீரைத்
துடைப்பதை யாம் கண்டுணர்ந்தோம்!
‘நாற்பது னாயிரமும்’
நாம் எவரும் கேட்டதில்லை
ஆகக் குறைந்தபட்சம்
ஆறாயிரம் பாடல்கள்
நீளும் எம் வாழ்வை நிறைக்கும்
இதில் என்ன ஐயம்?
மூச்சு விடாமல் முழுப்பாட்டும் பாடியவா…
மூச்சற்ற துடலில்…நின்
பாட்டெங்கும் உயிர்க்குதையா!
ஐந்து லட்சம் பேரை அருந்திப்
பசி தணிக்கா
இந்த வைரஸ் உந்தன் குரலைக் குடித்துத் தன்
தாகம் தணிக்க நின்
இதயத்தை நிறுத்தியதா?
தேவர்களும் கடவுளரும் நின் குரலை
நேரடியாய்
நாளும் இரசிக்க ஏங்கி
உன்னை அழைத்தனரா?
உலகில் எந்த மூலையிலும்
ஒரு கடைசித் தமிழன்
உலவும் வரை உனது
குரல் வாழும் …..சாகாதாம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply