கொரோனாக் காலம்

கொலையாலே உலகாளும் கொரோனா காலம்.
கூடி ‘பத்து இலட்சம்’ தாண்டி மரணம் நீளும்.
பல ‘வல்ல அரசுகளே’ பதறிச் சோரும்.
பாரதத்தில் பாதிப்பின் எல்லை மீறும்.
உலகின் தலை மகன் ‘Trump’ ம் மனையும் நேற்று
உற்றனராம் நோய்த்தாக்கம்…கூர்ந்து பார்த்தால்
உலகைத் தன் பிடிக்குள்ளே உருட்டிப் பார்க்கும்
‘உயிரியற் போர்’ இது….அதுளும் வாழ வேணும்!

வலைவிரித்து நோய் புவியை வளைத்துச் சாய்த்து
வலுக்குன்றா தெழும்….மீண்டும் பரவிப் பாயும்.!
உலவி நுரையீரலினை உருக்கி …சீவன்
உறிஞ்சி…இந்தக் கிருமி பல்கிப் பெருகிச் சூழும்.
இலக்குவைத்தெம் திக்கில்…இரண்டாம் அலையும் சீறும்.
எது வாழும்? எவர் எதிர்வு கூறக் கூடும்?
கலங்காது சுகாதார வழிகள் பேணக்
கவிசொல்வோம் யாம்…கடவுள் காக்க வேணும்!

கடவுளரும் முகக்கவசம் தேடி…தொற்றை
கைகழுவி நீக்கி…இடை வெளிகள் பேணி…
முடங்கி வழமை எல்லாமும் மாற்றி…நோயின்
மூலமெது அறியாமல் முழித்தார்! மாந்தர்
துடுக்ககற்றி தொலைந்த வாழ்வை மீண்டும் மீட்டார்!
சூழ்ந்த வானம், கடல், காடும் மாசை நீக்கத்
தொடங்கியது! செய்த பழிப் பரிசைப் பூமி
சுமக்குதின்று; திருந்தும் என்று ஞானம் பெற்று?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply