ஆயிரமாய் நல்ல அருங்கலைகள் பூமியெங்கும்
ஓயா துயிர்க்க உடல்தந்து –தாயான
தேவி கலைமகளே… தேர்ந்து திறண் தந்து
சாவி கொடுத்தியக்கு சார்ந்து!
வீரம் அரணாய் விளங்கும்; விடம் முறித்து
தூரத் துரத்தும் துயர் தடையை! –பார்த்துத்
தருவாய் நீ துர்க்கா… தனிவரங்கள்! தெம்பை
அருகிருந்து ஊட்டு அணைத்து!
பொருளிலார்க் கிந்தப் புவியில்லை; எல்லாம்
பொருளால் இயங்கும் ;பொருளின் –பெருமை
திருமகளே நல்கு! இலாபம் திரட்டித்
தருவாயே அள்ளிஅள்ளித் தான்!
கல்வியா? செல்வமா? வீரமா? …காரணங்கள்
இல்வாழ்வுக் கென்று இடையறாது –மல்லுக்கு
நின்று பயனில்லை! நீள் நிலத்தில் இம்மூன்றும்
என்றும்தான் வேண்டும் எமக்கு!
வீரமும் செல்வமும் இல்லா வெறும்கல்வி,
வீரம் கலை இல்லா மேற் செல்வம், –சீர்க்கல்வி
செல்வமில்லா வீரம், சிறந்தென்றும் நீண்டகாலம்
வெல்லா தருள்வீர் விரைந்து.
முப்பெரும் சக்திகளும் முன்னின் றெமைக்காத்தால்
இப்புவியில் வாழ்வில் எழிலேறும் –இப்பொருளை
தேறி’நவ ராத்திரியில்’ தேடி வரம்கேட்போம்
பாறும் இடரெல்லாம் பார்!