காத்துக் கிடக்கின்றேன்

கனவென்ற அன்னை நனவென்ற தந்தை
கலந்தாட வந்த சிறுவாழ்வு
கதையாகு மாமோ கவியாகு மாமோ
கதி என்ன நாளை? பதில்கூறு!
மனமென்ற மாயம் மடைதாண்டி ஓடும்
வழி தேடிப் போகத் தெரியாது
வரம் நாடி வாடி தவம் செய் நின் சேயும்
வளர்ந்தோங்க நீயும் அருள் தூவு!

அரைவாசி நேரம் அழிந்தோய்ந்து போக
அரைவாசி தானோ வருங்காலம்?
அதை யாரும் ஊரும் அறியாது….நோயின்
அணைப்புக்குள் வீழும் படி சூழும்
வரலாறு….இன்று சுவை சோறு விட்டு
மருந்தோடு மாளும் வரை நீளும்
வதையான காலப் பிணி தீரு மாமோ
வடிவேலா சொல்லு பரிகாரம்!

அழகான வாழ்வு அதைத் துய்த்திடாது
அதில் ஆசைக்கேங்கி சுகம் குன்றி
அலைந்தாடித் தானே அழித்தேனே நாளை
அருள் தேடக் கூட மனமின்றி
பிழை என்று கண்டும் “இது போதுமென்று”
பிழைக்கின்ற நீதி தனைக் காட்டி
பிணி தீர்த்திடாது பிணித்தாய்….என்னோடு
பிணை…நிம்மதிக்கு உயிரூட்டி!

உனையன்றி யாரும் உதவார்கள் என்று
உணர்வொன்றித் தானே உயிர்வாழ்வேன்
ஒளிதந்தி டாது இருள் தந்து வாழ்வை
உயர்த்தா திருப்பின் இனி வீழ்வேன்
“எனைவிட்டு யாரை எழுந்தோங்க வைத்தாய்
இறைவா” என்றுன் தண் நிழல் நின்றேன்
இனி உந்தன் இஷ்டம் பதில் சொல்லுன் எண்ணம்
எது? இன்று காத்துக் கிடக் கின்றேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply