ஆயிரம் ஓவியம் ஆண்டவன் தீட்டிட
அற்புதத்தால் சுழல் பூமி
ஆயினும் சாவதும் அண்டிடும் நோய்களும்
ஆழுதேன் துன்பமும் சாமி?
காய்களும் வெம்பல் கனிகளும் காலத்தின்
கைகளுள் சிக்குதே காண் நீ
கண்டது என்னதான்? கொண்டதும் என்னதான்?
கைப்பிடிச் சாம்பலே தான்…நீ!
எத்தனை ஆசைகள்? எத்தனை வேஷங்கள்?
எத்தனை துய்த்து நீ வென்றாய்?
எத்தனை ஏக்கங்கள் எத்தனை கனவுகள்
எத்தனை மாயை பின் நின்றாய்?
எத்தனை சுயநலம்? எத்தனை போட்டிகள்?
எத்தனை மமதை நீ கொண்டாய்?
எத்தனை சேர்த்தனை? யார்யாரை ஏய்த்தனை?
என்னத்தைத் தான் மீட்டுச் சென்றாய்?
போதுமே என்றிடும் பொன்செய்யும் மந்திரம்
புத்தியை மாற்றலை என்றும்
புலன் சுவை தீர்க்காமல் புண்ணியம் சேர்க்காமல்
பொருதினாய் பகல் இரா வென்றும்
சோதனை தாண்டினாய் சொத்துக்கள் தேடினாய்
சொர்க்கத்தை கண்டியா கொஞ்சம்?
சூழ்ந்ததெல்லாம் விட்டுப் போவதே மெய்; மண் பேர்
சொல்லிட வாழ்….அதே மிஞ்சும்!