பாவமென்பதை யாருரைத்தனர்?
பாவம் கோடி நீ செய்தனை!
பண்பு என்பதை யாவர் சொல்லினர்?
பாதகங்கள் நீ பண்ணினை!
தேவை தீர்த்திட யாது செய்யினும்
தெய்வம் என்சொலும் என்றனை!
தீமை தோற்றபின் பாவ மன்னிப்பும்
தேவைக் கேற்ப நீ பெற்றனை!
என்னை மிஞ்சிட இங்கு யாரென
எட்டுத் திக்கையும் கேட்டவா
என்னை வென்றிட யாவர் உண்டென
ஏறி விண்வரை ஆர்த்தவா
உன் வலிமையே சட்டம் என்றவா
ஊர்கள் அஞ்சிடச் செய்தவா
ஓங்கி வென்றவா….வேலில் வீழ்ந்தனை
உந்தன் கொற்றமும் எங்கடா?
உன்னைப் போலவே ஊர் உலகை
உலுக்கி …தோற்றவர் கோடி காண்.
உன்கை போல உடும்புப் பிடிகள்
ஒழிந்த சேதியும் உண்டுதான்.
உந்தன் ஆட்டமும் ஓய… உன் மறம்
ஊர்க்கு என்னதான் செய்ததாம்?
உன்னைப் போலவே யாரும் தோன்றலாம்
உன் முடிவே அவர்க்குமாம்!