தேசம் அன்றைக்கு தீயிடை வீழ்ந்தது.
திக்கு எட்டைத் தீ தின்று குடித்தது.
வாசம் வீசும் மலர் தென்றல் இரத்தத்தின்
வாடை கொண்டெழக் குண்டுகள் பிய்த்தது.
மோசம் போனவர் இலட்சம்…ஈற்றினில்
முடிந்து மாண்டது மானுடத்தின் கொற்றம்.
பேசும் வசந்தம் பிறகென எண்ணினோம்,
பேய் நிகர் நோயில் …திசை இன்று செத்திடும்!
கொத்துக் குண்டுகள் குதறிய திக்கிலும்
கொத்தணி எனக் கிருமியின் தாண்டவம்.
புத்துள் அடங்கியே போச்சு முதல் அலை,
புகுந்தூரைக் கொத்தும் இரண்டாம் மூன்றாம் அலை.
எத்திசையினில் எழும் விழும் யாரினில்
எங்கு தீண்டும் எவரால் பரவிடும்?
பத்தியம் எதால் பாறும்? எனத்தேறாப்
பாவிகள் ஆனோம்…விரிக்கும் அது வலை!
நாளும் எகிறிடும் தொற்று…மரணங்கள்
நாளும் பெருகுதே எங்கெங்கு நோய்ப்புற்று?
சூழும் துயர்கள் தொடர்ந்து…நாளை…கை
தூக்கிக் காப்பாற்றக் கூடுமோ …முற்காப்பு?
ஊழோ தொடருது இன்று? நோய்க்குறி
ஒன்றுமில்லையாம்..யாவர் நோய் கொண்டது?
மீள எவ்வழி உண்டு? அருகிலும்
விரியலாம் வலை …உன்னை நீ மீட்டெடு!