ஏனடா இந்நிலை? இந்த உலகுக்கு
இன்று நோய் சூழ்ந்த வாழ்வு.
எப்படி வந்தது? எப்பழி தந்தது?
எங்கும் இறப்பின் சூழ்வு.
வான்புகழ் கொண்ட நம் வாசலைப் பூட்டிற்று
மற்றோனைத் தீண்டின் தொற்று
மானுடர் தாழ்வுயர் வென்பதைச் சாய்த்தது
யாரும் நிகர்க்க வைத்து
வீழுமோ? நாளையே வீங்கி வெடிக்குமோ?
விஞ்ஞானம் சொல்வ தெங்கு?
வென்று மருத்துவம் காணும் மருந்து…நம்
வீட்டுக்கு வருவ தென்று?
பூமியை முற்றாய் முடக்கிட வல்லதோர்
பூதமாம் இந்தக் கிருமி
பூந்துடல் ஊடு எப் ‘புரமும்’ பரவிடும்
பொல்லாத பேய் இக் கிருமி!
சாமிகள் மோனிக்க சடங்குகளும் மாற
சதிராடும் நோயின் கிருமி
சமூக இடைவெளி முகக்கவசம் …கை
கழுவவே …சாயும் பொருமி!
ஆம் இவை செய்யாத அற்ப்பராய் சுற்றினால்
அழியலாம் நாமும் இருமி
ஆதலால் தனிநபர் சுத்தமும் பேணியே
அதை வெல்வோம் நாமும் உறுமி!