சொந்தக் குடில்

ஆகாயத்தில் வீடு அழகழகாய்க் கட்டிவைத்தேன்.
யாரெவரும் கண்டால்
அதிசயிக்கும் படி..வடிவம்.
எந்தனது எண்ணத்தைக் குழைத்தடித்த சுவர்வர்ணம்.
எந்தனது கற்பனையின்
ஏல்லைசொல்லும் உள்ளமைப்பு.
காற்றோட்ட மான கதவு ஜன்னல்
சுற்றிவரப்
பூந்தோட்டம் எல்லாம்
புதுவிதமாய் ஒழுங்கமைத்தேன்!
தினமும் மனதால்…
கூட்டி மெழுகியதால்
மினுங்குமது தங்கமாய் வெய்யில் படும்போது!
கனவுகளில் வருவதுபோல்
கலக்கிற்று என்கூடு!
இவ்வீட்டில் வசிக்க எண்ணுகையிற் தான்..மண்ணில்
ஒழுகும் குடிசையதும் இன்றிப்
பரதேசி
நிலையில் இழியுமென் யதார்த்தம் நெருடிற்று!
வெயிலுக்கும் மழைக்கும் விலங்குக்கும்
சுயநலஞ்சேர்
அயலுக்கும் எனைத்தான் காத்து
என்நிம்மதியை
அடைகாக்க எனக்கென்று சொந்தமாய்…
அகம்வேண்டும்.
அற்ப மனிதரென நானறிந்த பலர்…நல்ல
வாய்ப்பைப் பிடித்து
வசதியாய் உறைகின்றார்.
வாடகை செலுத்தி நேற்றுவரை வாழ்ந்துவிட்டேன்..,
எனக்கென்று வீடு
குறைந்தபட்சம் ஒருகுடிசை
அவசியம் எனஇன்று தெளிவுபெற்றேன்;.
ஆனாலும்
கற்பனையில் மட்டும்
வீடுகட்டி வாழ்ந்தவன் நான்…
சொந்தக் குடிசையொன்றை என்றுகட்டிக் குடிபூர்வேன்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply