கர்ண மனம்

அங்கங் கிருந்தவைகள் அனைத்தும் சிதறிடுது.
திறப்பும் மணிக்கூடும்
மூலைக்குள் ஒளிந்திடுது.
ஏதேதோ இலக்கம் அடித்து
மீண்டும்மீண்டும்
‘பாவனையில் இல்லை’எனும் பதில்வரினும்
யாதேதோ
வாயில்வந்த எல்லாமும்
கதைத்தல் தொடர்கிறது.
எனக்கும் உனக்குமில்லை
எதிர்வரும் எவருக்கும்…
ஏதோ விலங்குகளின்..’பேர்ப்-பட்டம்’ கிடைக்கிறது.
குளிப்பாட்டி வந்த குளுமைமாறு
முன்…மண்ணில்
முழுக்காடி தண்ணீர் அலம்பிப்
புளிஊத்தை
பூசிச் சிரிக்கும் புரட்சி
தொடருது… இது
ஏதேதோ பாடும் இளஞ்சிட்டு,
தொலைக்காட்சி
ஆட்டத்தை பார்த்து அபிநயிக்கும் வண்ணப்பூ,
என்ன நடக்குதிந்தக் குழப்படிக்கு
யார்பொறுப்பு?
ஓர்வாய் உணவுண்ண ஓராயிரம் பாடு,
ஓர்தடைவை உறுக்கிவிட்டால்…
ஒருமாரியாய்ப் பொழிவு,
அயலட்டை எல்லாமும்
அடுக்கடுக்காய் முறைப்பாடு,
அடிக்கடி சிரிக்க…
அகமெல்லாம் மத்தாப்பூ ,
அமுதூட்டா இரவில்… ஆராரோ பாடாத
பொழுதிலும் அன்பொழுக
அணைத்துறங்கும் பாசப்பூ!
‘அடித்து வளர்க்கவேண்டும்’ என்போரை
வழிமொழிந்தும்
அடம்பிடிக்கும் போது
கேட்பதெல்லாம் கொடுத்துவிடத்
துடிக்கின்றேன்É
என்தங்கம் உனக்குஈடு உலகிலேது?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply