எங்கிருந்து வந்தது இவ்வளவு மாரி?
எங்கிருந்து வந்தது இந்தளவு வெள்ளம்?
எங்கிருந்து வந்தது இந்தக் கொடுஞ்சூறை?
எங்கிருந்து வந்தது இந்தக் குளிர்க் கூதல்?
கடலுக்கு மேலும்
வானுக்கு கீழாயும்
இடையினிலே ஏற்பட்ட வெப்பத்தால்
வெற்றிடத்தின்
மடியில் பிறந்து,
மானிடர்கள் பேர் வைக்க
காற்றழுத்த தாழ்வு மண்டலம் எனத்தவழ்ந்து,
நேற்றுச் சுழன்று,
நினைத்த படி வளர்ந்து,
கூற்றாய் நகர்ந்து,
கொடும் பாசக் கயிறுகொண்டு,
மாரியை… வெள்ளத்தை…
மரம் கூரைதனை உலுப்பும்
சூறையை… உயிர்களை சுருண்டு குறண்டவைக்கும்
குளிரைத்… துணை என்று
குதித்து வரும் புயற் ‘புரவி’
அழகுக் கரையை அழித்தா கடக்கிறது?
எங்கோ நகர்ந்து
எம்மீது காதலாலா
இங்கே திரும்பி எமைச்சுற்றி வளைக்கிறது?
ஊர்களை மூழ்கடித்து,
உயிர்களை உறையவைத்து,
பேயாட்டம் போடுகிற
காற்றாலே பீழைசெய்து,
வேரைப் பெயர்த்து விருட்சங்கள் பாறவைத்து,
எங்கோ பிறந்த புயல்
ஏன்எமையே நோண்டிடுது?
பொங்கி அடித்தூரைப் புரட்டி
எதைத் தேடிடுது?
02.12.2020