தீமை இருள் துரத்தி – பல
தீப வரிசை நிரலைப் பரப்பி…நற்
சாம ம் வரை கொழுத்தி – ஒளி
சாலைகள் வீடுகள் எங்கும் சுவறி..ஓர்
கோலம் இட அடுக்கி – மனம்
குளிரும் வரை திருக் கார்த்திகை நாளிலே
நாமும் மகிழ்ந்திடுவோம்- ஒளி
ஜாலம் இடும்…அதில் நாமும் கரைவோமாம்!
தீமை அதர்மம் பொய்யும் – மனத்
தீயர் அரக்கரும் பேய்களும் என்றும்
காரிருளுக் குவமை – ஆக
கவியும் இவற்றினால் துன்பமே சூழ்ந்திட
ஓர் ஒளியின் சுடரே – நன்மை
உண்மை தரும ம் உயர்ந்தவர் தெய்வம் போல்
ஆகும்! விளக்கீடு – இந்த
ஆழ்ந்த பொருளை அறிவிக்குமாம் என்றும்!
இருளின் எதிரி ஒளி – இது
இயற்கையில் என்றும் வழங்கி வரும் சேதி
இருளைக் குடிக்கும் ஒளி -இதே
என்றென்றும் எந்த மதமும் சொல்லும் நீதி
இருளெனும் துன்பங்களை -ஒளி
இறை…இடைக்கிடை சுடர் விட்டு அருள் தந்து
துரத்தும் துயர் துடைக்கும் -இது
தொடரும் சரிதமாய் மண்ணை மலர்விக்கும்