வெறுங்கை வாழ்வா?

எங்கேயோ உலகம் போய்க்கொண் டிருக்கிறதே
இங்கே இருக்கிறேனே நான்
மனது நடுங்கிடது.
உயிருக்கு..மூச்சு உணவுக்கு அடுத்தபடி
பணமும் வசதியும் பகட்டுமே
தேவையாச்சு.
இவற்றை அடையாத,
இவற்றுக்கு ஏங்காத,
பிழைக்கத் தெரியாத,
நெளிவுசுழி வறியாத,
இவைபற்றி எண்ணாத ஏமாளி யாயாநான்
கவிதை இசை வாழ்வென்று
காலங் கடத்திவிட்டேன்?
சொத்தைச் சுகத்தை
தோட்டம் துரவைவாங்கி-
விற்று எவரையும் விட உயர்ந்தோன்
எனும்தகுதி
பெற்று ஜெயிக்காமல்
பேய்க்கதைகள் பேசிவெறும்
தத்துவம் ஞானம் ஆன்மிகமா தேடிநின்றேன்?
எனக்குப்பின் வந்தோர்…
என்முன்னே எனக்குமேலே,
பீடங்களில் அமர…, ‘பிரயோசனம்’ பாரா(து)
பொழுதைக் கழித்தாநான்
போய்க்கொண் டிருக்கின்றேன்?
பத்தை பலலட்சம் ஆக்கும் பயிற்சியின்றி
பத்தை பதினொன்று
பன்னிரெண்டு என்றுயர்த்த
ஆற்றலைச் செலவழித்து
அடிக்கடி களைக்கின்றேன்.
இமயமலை வேண்டாம் எனக்கெனினும்…
எனதருகே
சிறுகுன்றை என்றாலும்
நாளை சிருஷ;டிக்க
முடியுமா என்னால்?
சந்தேக வினாதொடுத்தேன்..!
ஏதுமற் றிருந்தால் நிழல்கூட மதியாது
என்பதை யதார்த்தமாய்
இன்று உணர்கின்றேன்.
நேற்றுவரை பெற்ற நல்லபெயர்,
பழிபாவம்
பார்த்துப் பயந்து பிழைஊழல் செய்யாமல்
மனச்சாட்சிக் கென்று
துரோகமற்று வாழ்ந்தவாழ்வில்
மனது நிறைந்தாலும்…
வெறுங்கையாய்த் தானுள்ளேன்
எங்கேயோ உலகம் போய்க்கொண் டிருக்கிறதே…
இங்கேயே இருக்கிறேனே நான்
நாளை என்னாவேன்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply