காற்றோடு போயிற்று

உன்அவல முறையீடென்
உளத்திலின்றும் கேட்கிறது.
‘சுற்றிவர நெருப்பு சுழன்று வளைத்தயலில்
பற்றிப் படர்கிறது,
பஸ்பமாக்க வருகிறது…
எத்தனைபேர் இந்த இடருள் சிறைப்பட்டு
நிற்கின்றோம்…
எமக்கேன் நீதி கிடைக்கவில்லை?
தர்மவான்கள் யாரும்…,
ஆபத்பாந்தவர்கள் தாம்
என்போரும்…,
எவரும் ஏறெடுத்தேன் பார்க்கவில்லை?
இப்படியே எல்லாமும் எரிய விடுவீரோ?
என்செய்யப் போகின்றீர்?
எப்படித்தான் நீதிசொல்வீர்?’
என்று முறையிட்டுக் கொண்டிருக்க
மிக அருகே
நெருப்பில் கருகுவோரின்
மரணஓலம் பீறியது!
முருங்கையில் படரந்த மயிர்க்கொட்டிக் கூட்டம்
எரிந்து சுருண்டு பொசுங்கி
ஓவ்வொன்றாய்
விழுந்திறக்கக் கிடங்கு வெட்டிச்
சுலபமாக
மூடிவிடுஞ் செய்கைபோல்
உன்குரலின் ஓய்வின்பின்…
எல்லாம் நடந்து முடிந்தும் அடங்கிற்று!
உன்குரலும் முகமும் கூட மறைந்துபோச்சு!
மானுட தர்மம் மனிதநேயம்
மனுநீதி
ஆயிரம் வியாக்கியானம்
அர்த்தமற்ற தத்துவங்கள்
எவற்றையும் மதியாமல் எரித்த
நெருப்பணைந்து
புகையும் படிப்படியாய்க்
காற்றில் கரைந்துபோச்சு!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply