வியப்பு

கடல், ஆழி, சமுத்திரத்தை
தன் உள்ளங் கைகளுக்குள்
பிடித்திருக்கும் பூமி!
விரல்களெனக் கண்டம் ஐந்து!
விரல்களின் இடுக்குகளில் விழுந்து
நீர் ஒழுகாமல்
இறுக்கித்தான் வைக்கும் புவி ஈர்ப்பு!
புவி நித்தம்
பிரதட்டை அடித்தாலும்
பிடித்த உள்ளங் கையை விட்டு
சிறிதேனும் கடல் சிந்திச் சிதறாது!
இவ் இயற்கைத்
திறமை பெருமையை யாம்…
தெளிதல் மிக அரிது!
“எல்லாமும் ஆகுமாம் எங்களினால்”
எனும் திமிர்ச்சொல்
சொல்லும் நரர் தோற்றுத்
தொலைந்ததே வரலாறு!
என் உள்ளங் கையில் எடுத்த கடற் குஞ்சு
மின்னி ஒருமீனாய் விழுந்து
தாய்க் கடல் சேர
எம் திறமை இன்மை எமக்கு விளங்கிடுது!
எம் மீனும் கடல் நீரின் இடத்தில்
நழுவியோடும்
தம் இயல்பைக் கற்ற கதை
எனக்கும் தெரிந்ததின்று!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply