நல்லைக் கந்தனின் கோவில் நிழல் இன்று
‘நாயன்மார்க்கட்டைத்’ தாண்டியே ‘செம்மணி’
எல்லை மட்டும் கவிந்து ஒளிர்ந்தது!
எவர்க்கும் தனது இருப்பிடத்தின் திசை
சொல்லியே வரவேற்றது! கம்பீரத்
தோற்றத்தில் ‘நல்லை வேலாய்’ நிமிர்ந்தது!
கல்லில் கவிதையாம்…’நல்லூரான் செம்மணி
வளைவு’ நம் காவல் கோபுரம் ஆனது!
யாழின் மேன்மை உயிர்ப்பு, தமிழ் சைவ
வாழ்வின் குறியீடு, எங்கள் கலாசார
ஆழத்தின் அடையாளம், வரலாற்றில்
அசைந்திடா நம் இருப்புக் குவமானம்,
வாழும் நல்லூரான் கோவிலே! யாழ் மண்ணின்
மரபினுக் குயிர் ஊட்டுவோன்… கந்தனே!
நீழல் அன்னான் அருளே! நிமிர்ந்தினி
நிலைக்கும் வளைவு….வேலன் புகழ் பேசுமே!
நலன் விரும்பிகள், குமரன் அடியவர்,
நல்லரச பணியாளர், மேன்மக்கள்,
பலர் இணைந்தனர்…பணிகள் தொடங்கிற்று!
பல இடர், ‘பெருந் தொற்று’ ‘ஊர் அடங்கு’…இவை
கலைக்க வில்லை இக் கனவை! குறைகளைக்
களைய…பேரெழில் நனவில் மலர்ந்தது!
உலகம் போற்றும் சரிதம்…’இப் பொங்கலில்’
உதய மாகுது…முருகன் செயல் இது!
நல்லைக் குகன் முகம் காட்டி அழைப்பதும்,
நம் மகிமையை உலகுக் குரைப்பதும்,
செல்லரித்துச் சிதையும் வழக்கங்கள்
திரும்ப வைத்து நாம்… நம் புகழ் போற்றிடச்
சொல்வதும், துயர் சூழத் தடுப்பதும்,
தொன்மை ஆலயத் ‘தோரண வாசலும்’
‘நல்லைக் கோபுர நகலும்’ இவ் வளைவு! நம்
ஞான வழிக்குக் கலங்கரை காண்…இது!