உண்மையாக உழைத்துக் களைப்பவன்
உரிமை, ஊதியம், பலன்கள், கவுரவம்
என்பவை இன்றி அவமதிக்கப் பட
ஏய்த்து மேய்ப்பவன் பொய்வேடம் பூண்பவன்
தன் நடிப்பால் உலகை மயக்குவோன்
தகுதிகள் அற்றும் தலைவனாய் மாறுவான்!
மண்ணின் நம்பிக்கை தன்னை ஏமாற்றியே
வாழ்ந்துயர்வோன்…வணங்கப் படுகிறான்!
இப்படி உண்மை ஏங்கிக் கிடக்கவும்
இங்கு பொய்யும் புரட்டொடு போலியும்
அப்பழுக்கற்ற வேசம் நடிப்பும்…நம்
அயலை முட்டாள்கள் ஆக்கி மோசம் செயும்
செப்படிகளும் வெல்லும் இழிநிலை.
‘செயல்கள்’ தோற்று வாய் வீச்சே பெறும் விலை.
எப்படிச் சரிதம் பெறும் விடுதலை?
என்று ஓயுமோ இந்த இடர் அலை?
மெய் முயல்வும், உண்மை உழைப்பதும்,
வேர்வை ஊற்றி விளைத்திட்ட செல்வமும்,
பொய்யை போலியை வேடப் புனைவினை
புடைத்து நிஜத்தை தெரியும் முறைகளும்,
பையை நிரப்பாது பண்பன்பை நல்கி
பலம்சேர் வாழ்வை பயிற்றும் கலைகளும்,
உய்யவைத் தூரை உயர்த்தும் அரசியல்
உறுதியும்…,என்றெம் மண்ணில் பொலியுமோ?