வேர்களின் வாழ்வு பற்றி
விரிவாகப் பேச மாட்டீர்.
வேர்களின் மூச்சைக் காக்கும்
விதம் பற்றி நினைக்க மாட்டீர்.
வேர் வாழக் காற்றும் நீரும்
வேணும்… நீர் உதவ மாட்டீர்.
வேர்களை மறந்து…அந்த
மரம் வாழ விதிகள் சொல்வீர்!
கிளை, இலை வெட்டிக் காக்க
கீதைகள் சொல்லி, சின்னத்
தளிர் நுனி கிள்ளி, பக்கம்
தளைத்திட உதவி, மொட்டு
அழகிய பூக்கள் வாழ
ஆயிரம் வழிகள் கூறி,
வளையாத தண்டைப் போற்றி,
மறப்பீர்…வேர் அழுக வாடி!
வேர்களில் வெந்நீர் ஊற்றும்
விசங்களைத் தடுத்து…பக்க
வேர்களை அறுக்கும் சொந்த
வீணரை மறித்து…காற்றும்
நீரொடு பசளை நித்தம்
நிறைவாகத் தந்தால்…வாழும்
ஓர்மரம்! இதைவிட்டென்ன
உதவியும்…அதுவோ பாறும்!