பாச் செடி

நானோர் பூச் செடிபோலே
கவிப்பூ நிதம் பூப்பேன்!
யார் பூவை இரசிப்பார்கள்?
யார் அழகில் மகிழ்வார்கள்?
யார் வாசம் முகர்வார்கள்?
யார் தேனை எடுப்பார்கள்?
யார் பறிப்பார்?
தலையில் யார் சூட்டுவார்கள்?
மாலையாக்கி
யார் தெய்வத்திற் கணிவிப்பார்?
யார் பிணத்தின் மேல் வைப்பார்?
யார் பறித்து விளையாட்டாய் இதழ்பிய்த்து
எறிந்திடுவார்?
ஏதையும பற்றி எக்கவலையும் அற்று
நாளும் தன் எண்ணம்போல்
இயல்பாகப் பூக்கின்ற
பூச்செடிபோல்…
கவிதைப்பூ பூக்கும் பாச் செடி யானாம்!
யாரும் இரசிக்காத போதும்…
அதில் பறித்து
யாரும் பயன் கொள்ளாப் போதும்…என்
எண்ணத்தில்
பூக்கும் இயல்பாயப்பாப் பூக்கள்!
சில யாரும்
நோக்கா துதிர்ந்து சருகாகிப் போனாலும்
எனக்குக் கவலையில்லை!
என் ‘நிற மூர்த்தம்’
தனிலிருந்து நித்தம் தளிர்த்து,
மனக்காம்பில்
மொட்டாய் முகிழ்ந்து, முகையவிழ்த்து,
இன்றைக்குப்
பத்தாய் நாளை பதினொன்றாய்
இன்னொருநாள்
நான்காய் வேறொருநாள்
பூக்கப் பிடிக்காட்டிற்
கூட…வெறும் கிளையாய் விருப்பம்போல்
குளிர்க்கவிப்பூ
பூத்துத் தொடர்வேன்!
பூக்கும் வரை பூப்பேன்!!
பூமி அதை இரசிக்கிறதோ…
இரசிக்காமற் புறக்கணித்தே
போகிறதோ….
எதையும் பொருட்டாக யான் கொள்ளேன்!
ஏன் இப்படிப் பூத்தாய்?
ஏன் இந் நிறம் மணம் தேன்?
ஏன் இத்தனை பூக்கள் ?
எனக்கேட்க விமர்சிக்க
யார்க்கும் உரிமையில்லை!
யார் ஏற்றும் ஏற்காது
போனாலும்…
காலம் ஏதோ ஓர் பொருள்கொண்டு
பாப்பூக்கள் பூக்க
பாரில் எனை முளைக்கவைத்த
காரணம் ஒன்றிருந்திருக்கும்….
கடைசி வரை யான் பூப்பேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply