சொர்க்கலோகம் என்ற ஒன்று பூமி தாண்டி இல்லையே!
சூழும் நரக லோகம் கூட தூர எங்கும் இல்லையே!
சொர்க்கலோகம் சென்று வந்தோர் சொன்னதேதும் இல்லையே!
துயர நரக லோகம் சென்று மீண்டோர் சொல்வதில்லையே!
சொர்க்கம் நரகம் என்பவை எம் எண்ணம் தன்னில் உள்ளன.
துன்பம் இன்பம் என்பவை எம் உள்ளம் தன்னில் உள்ளன.
மர்மத் துன்பத்துள்ளும் வாழ்வை ஏற்கும் நெஞ்சும் உள்ளன.
வசதி வந்தும் திருப்தியற்று மாழும் மனதும் உள்ளன.
ஏழைகட்கும் தங்கள் முற்றம் சொர்க்கமாக மாறலாம்.
எட்டடுக்கு மாடிக் காரன் நரகம் அங்கு காணலாம்.
பாழ் மனத் திருப்தி ஒன்றே வாழ்வின் சாரம் சொல்வது.
பதவி பணம் பட்டம் நிம்மதியை யார்க்குத் தந்தது?
போதும் என்ற வார்த்தை ஒன்றே பொன்செயும் மருந்தடா!
புலன் திருப்தி கொண்டிடாமல் வாழ்தல்…மாழ்தல் போலடா!
வேதம் கற்கத் தேவையில்லை; வாழ்க்கையை விளங்கடா!
விண்ணில் சொர்க்கம் நரகமில்லை; வீட்டில் தேடிப் பாரடா!