முகிலாகுமா மனது?

மலைகளில்..முகில்கள் வந்து
குந்தி இளைப்பாறி
களைதீர்க்கக் கண்டுள்ளேன்!
கைகளுள் கரைந்து போகும்
இவைகளை…இவற்றின் இயல்பை…
பரவுகிற
பரவசத்தை…
சுதந்திரமாய்ப் பயணிக்கும் இயங்குகையை…
அறிந்துள்ளேன்;
அவற்றை அளைந்தும் களித்துள்ளேன்!
வானில் தனியான இராச்சியம் அமைத்து,
தூசு நீராவியினால்
தூய உருவெடுத்து,
வேளைக்கோர் வடிவுகொண்டு,
விரிந்து, ஒடுங்கிநின்று,
தேவதைகள் போல் திரிந்து,
திசைகளிலே ஒளி தெறிக்க
கோடி கோடி வர்ணஜாலம்
கொட்டிக் குவித்தென்றும்
வாடாச் சுதந்திரத்தின் வடிவான
முகில்களுடன்
ஓடத் துடிக்கும் உளம்
உடல் அவற்றின் வேகத்தில்
ஊரக் களைக்கும்!
யதார்த்தம் உலகவாழ்வில்
வாடித் துடிக்கும்!
மனம் எப்போ முகிலாகும்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply