கால அலைகரைக்காக் கற்பெயர்கள்

அலைகள்…
கரையில் அமிழ்ந்த காலடித்தடத்தை
அழித்துவிட்டுப் போவதுபோல்…
அனுதினமும் காலத்தின்
அலைகள்…
புவியில் அமிழ்ந்த உயிர்களின் தடத்தை
அழித்தழித்து நகர்கிறது!
ஆம் அவைகள் வாழ்ந்து சென்ற
தடங்கள் தடயங்கள் தங்கியதா மண்ணிலின்று?
கடக்கும் அடுத்தடுத்த
கால அலைகளின் முன்
தடங்கள் தடயங்கள்
தாம் அழியும்…இதே இயல்பு!
அலைகள் கரைத்தழிக்கா
அயற்கரைக் கற்பாறைச்
சிலைகளென…கால அலைசிதைக்காச்
சிலர் பெயர்கள்
வாழும் நிலைத்து!
வாழ்வில் செயற்கரிய செய்து,
ஊருக் குலகுக்கு உண்மை உழைப்பீந்து,
தான்பிறந்த மண்செழிக்க
தனை உரமாய்த் தான் உவந்து,
வாழ்வுக்குச் சாகா வரம்தந்து,
மானுடமும்
வாடாது வேரில் மழைவார்ககும்
வல்லவர்பேர்
கால அலைகளிலும் கரைந்து மறையாது!
ஞாலம் இருக்குமட்டும்
நைந்து நலியாது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply