காற்றினில் ஏறியே கவிதைகள் சொன்னோம்.
கடலதன் ஆழமும் நீளமும் கண்டோம்.
ஊற்றுநீர்ச் சுவையில் அமுதம் உருசித்தோம்.
ஊர் வயல் வெளியிலும் உயிரைத் தொலைத்தோம்.
சேற்றிலும் செல்வம் செழிப்ப தறிந்தோம்.
திசையெலாம் சொர்க்கம் சிரிப்ப துணர்ந்தோம்.
போற்றி எம் மண் எனப் புரண்டே உருண்டோம்.
புண்ணியம் செய்தனம்…இங்கே பிறந்தோம்.
காடும் கரம்பையும் கவின் வயல் குளமும்
காணும் இடமெலாம் பசுங்கரை வெளியும்
ஓடையும் அமுதம் உவந்திடும் கிணறும்
ஒப்பிலா உயிர்ப்பொருள் தரும் பெருங் கடலும்
கூடிக் குவியும் புள் கால்நடை மரமும்
கூற்றைத் துரத்திடும் கரும்பனை நிரையும்
தேடித் தொழும் இறை கோவிலும் அருளும்
தேன் கவியும் இசை கூத்தும் எம் செல்வம்!
விரலுக்கு மிஞ்சியே வீங்காத ஏக்கம்
விளைப்பு அறுப்பால் மறந்திட்ட தூக்கம்
உரலால் உலக்கையால் உடல்பெற்ற திண்ணம்
உழைத்துக் களைத்ததால் உருக்கான உள்ளம்
மரபுகள் பேணியே மலர்ந்திடும் வண்ணம்
மாற்றங்கள் சூழினும் மாறாத எண்ணம்
பெருமைதான் எங்களூர் வாழ்க்கையின் இன்பம்!
பிற திக்கில் இல்லை நம் எளிமையும் அன்பும்.