விதி என வாழ்ந்திடும் வில்லங்க வாழ்க்கையை
விட்டின்று வெளியில் வா மனிதா!
மேவியே…சாத்திரம் வெற்றி நல்காது நின்
வேர்வையை நம்படா மனிதா!
சதிபுரி காலமும் தடையிடும் துன்பமும்
தாண்டி நீ கால்பதி மனிதா!
சகலதும் மாறும் உன் முயற்சியால் மட்டுமே
சாதனை செய்…எழு மனிதா!
நேர்நிலைச் சிந்தனை நெஞ்சினில் நம்பிக்கை
நினைவினில் வென்றிடும் கனவு…
நீள் துயர் யாவையும் நீற எரித்திடும்;
நிச்சயம் மாறும் உன் நனவு!
ஓர்மமும் வேகமும் ஊறிடும் தாகமும்
ஊட்டும் உனக்குளே தினவு!
உன் எதிர் நிலை உணர்வோட்டு…நிமிரலாம்
உனைத்தேடும் வெற்றியின் இணைவு!
வளங்கள் இருக்கலாம் வாய்ப்பும் இருக்கலாம்
வசதியாய் சூழலும் வரலாம்.
மனம் முயலா விடின் வழி அறியாவிடின்
வளர்ச்சிகள் தோற்றுமே விழலாம்.
குளிர் வளமற்றதோர் குடி எனும் ‘மேற்கவர்’
குணத்தினால் பெறும் இடம் முதலாம்.
குலக்குணம்…எதிர் மறை மனம்; அதை விடு, முயல்,
கொடியேற்று விண் நினைத் தொழுமாம்!