வாழும் வழி செய்வோம்!

நாளை எதுதான் நடக்கும்?
எனத்தெரியாக்
காலம்.
நோயும்,கவலை, துயர், சாவும்,
யாவரிலும் தொற்றும்,
தனிப்படுத்தல் சிகிச்சைகளும்,
கூடலாம்;
முழுஊரும் குறண்டி முடங்கிடலாம்;
மீள முடியா மிகுஅவலம் அட்டதிக்கும்
சூழலாம்;
யாரெவரும் தோற்றும் மறைந்திடலாம்.
“ஊசி வருமா
ஊர்நூறு சதவீதம்
ஆசி பெறுமா அதால்”
என்ற கேள்விகட்கு
சாதகப் பதிலோ “சாத்தியமில்லை” பதிலோ
யார்க்கும் கிடைத்திடலாம்.
யமன் வேறு நாடுவிட்டு
எம்திக்கில் மட்டும் தூதுவரை அமர்த்திடலாம்.
வசதிக் குறைவும், வளக்குறைவும்,
திரிபடைந்து
பசியால் பெருகும்
கிருமிகளின் பயங்கரமும்,
எம்கையை மீறி எழும் நோயின் வீரியமும்,
எம்மாதிரி முயன்றும்
எமைமீட்காத் தடை வழியும்,
ஓரிரு ‘செயற்கைச் சுவாசக் கருவிகொண்டு’
நீளும் பெரும்பிணி நிறுத்தாது
தொற்றுக்கு
ஈடு கொடுக்க ஏலா
எதார்த்தமும் தொடர்ந்திடுமோ?
இல்லை…
இறையருளும், இயற்கை கால நிலை, விதியும்,
மல்லுக்கு நிற்காமல்
தடுப்பூசி வாங்கி ஏற்றி
மீட்கும் பொறிமுறையும்,
அயரா மருத்துவத்தின்
ஆட்சியுமிப், பேய்ப்பிணியை அடக்கி
ஓர்போத்தலிலே
அடைத்து ஆழ்கடலில் விட்டோ…
அயல் எல்லைச்
சுடலைச் சிதையேற்றிச் சுட்டோ…
ஜெயித்திடுமோ?
நாளை எதுதான் நடக்கும் எனத்தெரியாக்
காலம்…
ஏற்கனவே கடும்போரில் மாய்ந்த இனம்…
நாமும் உறவும் நமதயலும்
ஊர்களும் நம்
நாடும் பிறநாடும் நானிலமும் வையகமும்
மீளவேண்டும் விரைவிலிந்த வினையிருந்து
என நேர்வோம்!
நாம் சுயநலம் விட்டு;
நம்பழிகள் தீவினைகள்
பாவமனம் தவிர்த்துப் பழையபடி
பயம் அற்று
ஓர்உச்ச நிலை வேணாம்… உயிர்பிழைத்து
நிம்மதியாய்
வாழும் வழி செய்வோம்.
வளர வழி சொல்வோம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply