எப்படித்தான் கிளைக்கும்?

மரணத்தின் தூதுவர்கள் வருகின்றார் மிக அருகில்!
எருமைகளில் அல்ல
எவரின் கண்ணும் காணாக்
கிருமிகளில் ஏறிக் கிளைக்கின்றார்
திசை திக்கில்!
எமனெறியும் பாசக் கயிறு
எம் அயல்களிலும்,
எமக்கு அருகினிலும்,
இன்று வீழ்ந்து உயிர்பறித்துத்
தெறித்துப் புதுப்புதுத்
தெரு மூச்சை அடக்கிடுதே!
அறிகுறிகள் ஏதுமற்று அனாயசமாய்க் காற்றில்
வரு ‘தீநுண்மி’
தடைகளில்லா வாய் மூக்கில் சாய்ந்தாறி…
சிறுபொழுதில்
மூச்சுக் குழற்படியாலே இறங்கி…
சுவாசச் சிற்றறைகளினைச் சுருட்டி…
தன் வீடுகட்டி…
அவகாசம் விடாமல் அடுத்தகணம் குடியேறி…
கவலையற்றுப் பெருகிக்…களிக்க;
சுவாசப்பை
சுருங்கி விரியாது
காற்றைச் சுவாசிக்க
மறந்து தவிக்க;
வழியெல்லாம் பிணம் குவிய;
உருமாறி உருமாறி ஊசிமருந்தையும் மீறி
விரைவாய் மனுக்குலத்தை விழுங்கி
விருந்தாக்கக்
கருதிப் பெருகுது காண்…கட்டுக் கடங்காத
கிருமி!
எப்படித்தான் கிளைக்கும்
மனித விதி?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply