ஒருகோடி துன்பங்கள் தருகின்ற காலத்திற்-
குண்மையாய் இரக்க மிலையா?
உயிரதும் இதயத்தில் உருக்கமும் கருணையும்
உளத்தில் ஈரமுமில்லையா?
தருகின்ற துன்பங்கள் தம்மையோர் இடைவெளி
தனில் தரும் குணமுமிலையா?
தயவு தாட்சண்யங்கள் பார்த்தெம் நிலைபார்த்து
தழுவிடும் அறமுமிலையா?
நிரைநிரையாகவே நெருக்கடி தம்மையே
நிமிடத்துக் கொன்று எனவே
நிதம் தருகின்றதே நெருப்பெறி கின்றதே
நிம்மதி தன்னைச் சுடுதே!
சரித்தெமை வீழ்த்துதே சாவை நாடென்குதே
தவித்தவாய் வாட விடுதே!
சரிதம் படைக்கத் தடுக்குதே என்றும் நாம்
தன் காலைச் சுற்ற சொலுதே!
எப்பழி யுற்றமோ? எவ்வினை செய்தமோ?
ஏன் எமக் கிந்த நிலமை?
எவர் வாழ்வழித்தமோ? எவர் நிம்மதி மாய
ஏய்த்ததால் இந்த கொடுமை?
தப்பாய் நடந்தமோ? தருமம் மறந்தமோ?
சாயலை எங்கள் வறுமை.
தாழ்வுயர் வென்று எம் தரையைப் பிரித்ததன்
சாபமோ இந்த இழிமை?
“அப்பனே அருளென்று” அன்றாடம் கோவில்கள்
அணுகியும்…நீளும் வழமை…
ஆயிரம் விரதங்கள், அனுதினம் நேர்த்தியென்-
றழுதுமேன் அற்ப தனிமை?
துப்பிய குண்டில் தொலைந்ததும் மாய்ந்ததும்
தொடவில்லை…’கால மனதை’
துடக்கென்று தீரும்? எம் துயர்முற்றும் என்றிங்கு
தொலைந்துமே மாற்றும் நனவை?