மீண்டென்றெம் வாழ்வு வாய்க்கும்?

காலங்கள் மாறிடும் கோலங்கள் மாறிடும்
கனவுகள் மாறி உதிரும்
கண்களின் காட்சியும் கவிதையின் கோணமும்
கருத்ததும் மாறி அதிரும்
ஞாலத்தின் வாழ்வியல் மாறிடும் …நீதியும்
ஞாயமும் மாறி மறுகும்
யார் எண்ணினார்…. யாரும் அருகில் வருவதும்
தடையென்ற நிலையும் அணுகும்!
மீளவும் கூடலும் விளையாடல் சேரலும்
மேடையில் ஆடல் தொடலும்
வீதியில் கோவிலில் தள்ளு முள்ளுப் பட்டு
மெய்தழுவி அன்பு படலும்
ஏலுமோ சீக்கிரம்…? என்பதே புரியாத
இழிவுக்குள் மனித குலமே
இன்றைக் கிருக்குது …எப்போ தனிச்சிறை
இடியுமென் றழுது …மனமே!

கண்களில் தென்படா நுண்ணுயிர் காற்றையும்
கடல் தரை தனையும் வாட்டும்
கண்டங்கள் தாண்டியும் காலத்தை நோண்டியும்
கண்ணில் விரல் விட்டு ஆட்டும்
இன்றிந்த உலகையே தனிமைப் படுத்திடும்
“இரு எழு” என்றும் ஓட்டும்
இயல்பு, வழக்கங்கள் எல்லாம் தலைகீழாய்
இயங்கவும் வித்தை காட்டும்
என்று சமூகத்தின் இடைவெளி, முகமூடி
இல்லாத திசையை ஆக்கும் ?
எத்தனை காலங்கள் இந்த இடர் நீள
ஏய்த்து ஊர் உலகை மேய்க்கும்?
“விண்ணர்கள் யாம்; நேற்று விண்ணில்போர் செய்தனம்”
வேலியைத் தாண்டுதற்கும்
வேணடுறோம் கிருமியை நேர்கிறோம் சாமியை
மீண்டென்றெம் வாழ்வு வாய்க்கும்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply