கோடி செல்வ முத்தினில் குளித்தெழுந்த துன்பெயர்.
கூடி நட்பு உறவு சூழ கொஞ்சி நின்றதுன் புகழ்.
வாடிடாத தோட்டமாய்ச் செழித்ததுன் நனவுகள்.
வந்த நோயில் வெந்து நீயும் போனதேனோ தனிமையில்?
“போய்ற்று வாறன்”, “ஒன்றுமில்லை”, “நீ கவனம்” என்றனை.
“Possitive” என்று வந்தபின்பு போய்த்தனித் தொதுங்கினை.
“காய்ச்சலில்லை” என்று நாட்கள் சிலதின் முன் கதைத்தனை.
கடுமையாக்கி ‘மூச்சு எந்திரத்தில்’ நாள் கழித்தனை.
போனபோது பார்த்தனம்…பின் பார்க்க மாட்டம் என்று…நீ
போனபோது எண்ணவில்லை! மீள ஏலா எல்லையே
தாண்டி “நேற்றகன்றாய் இவ் உலகை விட்டு” என்பதை
தாங்கவில்லை! இடையில் உன் பயணம் பணிகள் நிற்குதே!
நீ மரிக்க…நின்னைத் தொற்று நீக்கி, மூடி, பெட்டியில்
நேரே ‘வைத்ய சாலை’ விட்டு ஏற்றி ‘எரியூட்டியில்’
யார் எவர்க்கும் காட்டிடாது சுட்டெரித்த சூழலில்
யாரை நொந்து என்ன? உன்னைத் தேடினோம் உன் சாம்பலில்!
“மேளம், ஐயர்,கிரிகை,சுண்ணம், பந்தம், சுற்றம், தோரணம்
வெடிகள், பாடை, அஞ்சலிகள் அற்று போகும் ஓர்வரம்
கேள்” என்றுன்னைத் தூண்டியதார்? ஏன் உனக்கிச் சோகமும்?
கெட்ட கிருமி தொட்ட துயரம்…மாறிப்போச்சு யாவையும்!
‘PCR test’, ‘Antigen test’, ‘possitive’ ‘negative’ முடிவுகள்,
பிறகு ‘தனிப்படுத்தல்’, ‘தனிமைப் படுத்தும் நிலைய’ சிகிச்சைகள்,
வீதி மூடல், ‘lock down கள்’, ‘பயணத் தடை’, ஊரடங்குகள்,
‘Ventilator’, ‘Burner’தகனம், கண்டு அஞ்சுதெம் உயிர்!
இப்படியோர் காலம் தன்னை முன்பு கண்டு கேட்டிலோம்.
இன்னும் ‘இஃது’ எத்தனைநாள் நீளும் யாரும் அறிகிலோம்.
இப்படியாய் இடரும், சாவும் வந்ததேனோ ?தேறிடோம்.
என்று யாரும் ஊசி போட்டு இதனை வென்று ’வாழுவோம்?’