பேதம்

எத்தனையோ பேதம்
எத்தனையோ பிரிவுகளால்
நித்தம் அடிபட்டு நிலைகுலையும் எம்குலத்தில்
ஊசியாலும் வந்திடுமோ
அடுத்த உயர்வு தாழ்வு?
ஊசியிட்டோர் ஓர் பிரிவு,
ஊசியிடார் ஓர் பகுதி,
‘கோவிட் ஷீல்ட்’ இட்டோர் ஒருகுலம்,
‘சினோபார்ம்’
போட்டவர்கள் இன்னோர் புறம்,
ஆம் ‘ஸ்புட்னிக்’
ஏற்றியவர்…‘பைசர்’
‘மொடேர்ணா’ வுக் கிணங்கியவர்
மாற்றுக் குடிகள்,
‘இரு டோசும்’ பெற்றவரோ..
மேலோர்,
ஒரு ஊசி ஏற்றி அடுத்ததற்காய்
காத்திருப்போர் இடைநிலையர்,
ஏதும் ஏற்றார் கீழோர்,
‘இரண்டாவதைத்’ தவற விட்டோர்
மிகக் கடையர்,
பெருமளவு ‘ஓர்வகையைப்’ பெற்றோர்
பெரும்பாண்மை,
சிறிதளவு ‘வகை’ பெற்றோர் சிறுபாண்மை,
நாம் மறவாச்
சாதியைப்போல்…
இரத்தத்தின் தன்மை வகையைப்போல்…
யோனிப் பொருத்தம்போல்…
இவர் அது அவர் இது
என்னாகும் சம்பந்தம்?
இந்த ஊசி அந்த ஊசி
என்ன பொருத்தம்?
இப்படி இப்படியாய்…
எத்தனையோ பேதம்
எத்தனையோ பிரிவுகளால்
நித்தம் அடிபட்டு நிலைகுலையும் எம் இனத்தில்
ஊசியாலும் வந்திடுமோ
அடுத்த உயர்வு தாழ்வு?
நாளை எம் உடல்களின்
எதிர்ப்புச் சக்தியிலும்
தோன்றிடுமோ…வழக்கம் போல்
ஏதேனும் தாழ்வுயர்வு?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply