ஊழி?

கருகிக் கிடக்கிறது காடு.
கழிவுபல
கரையத் துடிக்கிறது காற்று.
ஈரமற்று
எரிந்து தரிசாச்சு எழில்வயல்கள்.
நஞ்சூறி
மரிக்கத் தொடங்கிற்று மாகடல்.
உயிர்ப்பொருள்
உருக வலுவற்றுளன உடல்கள்.
நிம்மதியும்
அருக நலிந்துளன அகங்கள்.
கொடுங்கனவு
விரவ தொலைகிறது இராத் தூக்கம்.
விதி…இதற்குள்
ஒருவாறு மூச்சுவிட்டு
உயிர்ச்சுடரைக் காப்பமென்றால்…
பெருகிடுது தூசும்,
பிணி விதைக்கும் விசவகையும்,
உருவாக்கப் பட்டு
உயிர்பறிக்கும் கிருமிகளும்!
குறைந்து வருகிறது பிராணவாயு.
குன்றாமல்
பரவும் பெருந்தொற்று!
பனியுருகி, சூடேறி,
கரைமீறி வெள்ளமொரு காடாகி,
மழைநாறி,
பருவங்கள் மாறி, பலிகூடி,
உயிர்வாழ
அருகதைகள் அற்றதென ஆகுதா
நம் புவிமுழுதும்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply