விதியல்ல இவர் வாழ்வு!

நம்முன்னோர் செய்பாவம் நாங்கள் சுமப்பதுபோல்…
நம்பாவம் தன்னை நம்சேய்கள் சுமப்பதுபோல்…
நம்சேய்கள் பாவத்தை
அவர் சேய்கள் சுமப்பதுபோல்…
யார்யாரோ செய்தபழி
யாரோ பொறுப்பதுபோல்…
யார்யாரோ செய்தவினை
யாரோ அறுப்பதுபோல்…
நம் வீட்டுக் கழிவுகளை,
நமது அழுக்குகளை,
நம் அசண்டை யீனத்தால்
நாம் போடும் குப்பைகளை,
நம் பொறுப்பிலாக் குணத்தால்
நாம் வீசும் ஊத்தைகளை,
வீதிகளைக் கூட்டி…
வீடு வீடாய்த் தேடி…
வாய்க்காலில் இறங்கியே வாரி…
சாக்கடையில்
மூழ்கி…மலக்குழியில் முங்கி…
கைவைக்க
ஏலாத நாற்ற, சகிக்க இயலா வீச்ச,
உக்கிப் புழுத்த உணவு குப்பை சேறுகளை
தக்கவாறு தம் மனச் சக்தியால்
மிகச் சகித்து
அகற்றும் பிறவிகளும்…
ஆம் மனிதப் பிறவிகள் தாம்…
அகத்தில் பதிப்போம்!
அவர்களுக்கும் ஐம்புலன்கள்,
ஊத்தை அருவருப்பு உணர்வு,
அரியண்ட எண்ணம்,
நாளுழைப்பி லேனும்
நாற்ற உழைப்பிலேனும்
வாழவேண்டும் நல்லதொரு வாழ்வென்னும்
தொடர் ஏக்கம்,
ஆசா பாசங்கள்,
அன்றாடச் சந்தோசம்,
உள்ளதென் றுணர்வோம்!
உயிர் பறிக்கும் விச ஜந்து,
கொள்ளை நோய்க் கிருமி,
கூடாத நச்சு வாயு,
உள்ள… இடம் ‘தூர்த்து’ உயிர்கொடுத்து
அவர் வேலை
செய்தகன்று செல்ல…
சிறிதும் கவலையற்று
பெய்கின்றோம் கழிவு குப்பை மழை;
அவரின் துயர் எண்ணோம்!
கழிவோடு அவர்மாய…
கழிவு நிதம் வீசுகிற
‘கழிவுகள்’ நாம் என என்று தெளிவோம்?
கழிவகற்றும்
தொழிலின் வலிபுரியோம்;
துப்புரவுப் பணியர்க்கு
உதவாத போதும்…உபத்திரவம் செய்யாத
விதம்….நாம் நடக்கவேணும்….
இனி நாம் பழகிடுவோம்!
“குப்பைக்காரர் அவர்கள் அல்லர்”
எம் கழிவழுக்குக்
குப்பைகளை அள்ளுபவர்!
“நாங்கள் தாம் உண்மையான
குப்பையர்கள்” என்றுணர்வோம்!
நம் ‘குப்பைத் தனம்’ களைந்து
எம் வாழ்வு நாறாமல் இரவு பகல்
பணிசெய்து
தம்மை அழுக்காக்கி
அயலை அழகாக்குவோரை…
மதிப்போம்;
அவர் உடல் மன வலி களைப் புரிவோம்!
விதியல்ல இவர்வாழ்வு…
விளங்கி உதவிடுவோம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply