மரணப் புதிர்

எங்கிருந்தோ வந்தான்.
எவர் விழிக்கும் தெரியான்.
எங்கு எதால் எப்போ எமைச்சேர்வான்
எனச்சொல்லான்.
ஏழை பணக்காரன்,
தாழ்ந்தோன் உயர்ந்த மகன்,
ஊராள்வோன், ஒன்றும் இலா ஆண்டி,
என எவரும்
“தனக்கு ஒரே மாதிரித்தான்”
எனச் சமானமாய்த் தொடுவான்.
நனவில் புதுவாழ்க்கை முறையொன்றை
நாம் எந்தக்
கனவிலும் காணாத படி செய்தான்.
தொன்று தொட்டு
ஆண்டவனைச் சாட்டி,
அடிமைத் தனம் பரப்பி,
தீண்டாமை ஆசாரம் தீட்டு துடக்கென்னும்
மதங்களின் வேர்களிலே…
மனிதர் இறுக்கிவைத்த
விதிகளையும் தளரவைத்தான்.
வழிபாடு, சடங்குகள்,
ஒவ்வொரு வரும் தமக்கு
உகந்ததெனும் நடைமுறைகள்,
வெவ்வேறு வழிமுறைகள்,
விரும்பியோ விரும்பாதோ
ஓர்கோட்டில் செல்லவைத்தான்.
உலகை ஒழுங்குசெய்தான்.
வீரியத்தை நாளுக்கு நாள்பெருக்கி…
பரவி எந்த
ஊர்களையும் விழுங்கி…
உயிர்களையும் கெளவி…
ஏதோ ஓர் மாற்றத்தை,
மறந்த பழக்க வழக்கத்தைப்,
போதித்தான் மீண்டும்.
புரியாமல் எவ்வாறிச்
சோதனையை வென்று
மீளத் துளிர்த்தோடும்
பாதையினைக் காண்பதென்று
பாரும் முயல்கையிலே
என்னென்ன வியூகம் எப்படி நாம்
வகுத்தாலும்
தன்னை அதற்கேற்ப தயார்செய்து
உருமாறி
இன்றும் வலிமை கூடி
எண்திக்கும் பரவுகிறான்.
இந்த விழியறியா ‘விசக்கிருமி
அரக்கனை’ “எவ்
மந்திரம் தந்திரத்தால் மாய்க்கலாம்”?
எனக்கேட்டு
அந்தரப் படுகின்றோம்!
ஆலயமும் போகாது
இந்த ‘மரணப் புதிரை’ அவிழ்க்க இனி
எந்த மருந்தருள்வான் இறைவன்
எவரறிவோம்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply