மாற்றமென்ற ஒன்றுமட்டும் மாறிடாது பூமியில்
மாறிக்கொண் டிருத்தல்தானே கூர்ப்பின் வேர் இயற்கையில்
தோற்றம் மாறும் சொல் செயல் தொடர்ந்து மாறும் வேளையில்
தொன்மையும் தனித்துவமும் சிதையுமே எம் சூழலில்.
பழமையும் கழிந்து சென்று புதுமை பூத்து வந்திடும்.
பருவம் மாற புதிய புதிய பதில்கள் தேடும் கேள்வியும்.
முழுதும் மாறி முகமும் மாறி முடியுமோ தனித்துவம்?
மூல வேர் அழிந்திடாது புதிய பூக்கள் பூக்கணும்!
உடலில் கால நிலைமைக்கேற்ப சில குணங்கள் மாறலாம்…
உறுதி ஆற்றல் அறிவு துணிவு புறத்திற்கேற்ப கூடலாம்…
அடிப்படை உயிர் இயக்கம் அனைத்தும் மாறலாகுமா?
அகத்தின் ஆசை ஏக்கம் காதல் உணர்வு வாழும்…
சாகுமா?
காலத்திற்கு ஏற்ற கோலம் மாறுவது நியாயமே
கனவு நனவு நிலைமைக்கேற்ப மாறி விடக் கூடுமே
பாலை கூட சோலையாகும் பணமும் வந்து போகுமே
பண்பு பாசம் மாறிடாது…காணும் மாற்றம் வேணுமே!