செய்வதெல்லாம் சரியென்று நினைத்தே…நானும்
செல்கின்றேன் என்வழியில்! பிழைதான் என்று
எய்யுமெவர் முறைப்பாட்டு அம்பும் வீழ
என்கருத்தை வலுப்படுத்தித் தான்யான் போறேன்.
செய்வதெல்லாஞ் சரியென்று நினைத்தே..நீயும்
செல்கின்றாய் உன்வழியில்…எவரும் தாங்கள்
செய்வதுதான் சரியென்று சொல்வார்…யாரும்
செய்வதெல்லாம் சரியாகத் தானா கூடும்?
எனக்கு ஒன்று சரி பிறர்க்கு வேறு வேறு
எதுவெதுவோ சரியாகும் என்றால்…எந்த
மனிதனதும் பிழைகளெவை? சரிகள் என்று
நினைப்பதெல்லாம் சரிகளில்லை ..பிழையும் இல்லை.
அனைவரதும் சரிபிழையைத் தாண்டி…வைய
அறஞ்சொல்லும் சரிகளெவை? இவற்றைத் தேடி
புனிதமான பயணமொன்றைத் தொடங்கு கின்ற
புரட்சியொன்று உடன்வேண்டும் இதுநம் தேவை!