ஆயிரம் ஆயிரம் வண்டி இரைச்சல்கள்,
அலறும் ‘ஹோண்கள்’ அதிர் ‘ஒலி பெருக்கிகள்’,
கூவும் சந்தைக் கூச்சல் குழப்பங்கள்,
கோஷம் பிளிறும் ஊர்வலக் கூட்டங்கள்,
ஆலை இயந்திர இடிகள் முழக்கங்கள்,
அடக்கி விழுங்குது…குயில்களின் கூவலை!
வீசும் காற்றின் மிருதான பாடலை!
வண்டின் மெல்லிசை, கிளிகளின் பேச்சினை!!
செயற்கை, விஞ்ஞானம், பொறிகள், தொழில் நுட்பம்,
திட்ப நுட்பங்கள், யாவுக்கும் எந்திரம்…
இயற்கையின் உயிர் மூச்சை அடக்கிற்று!
இயல்பின் குரலை இறுக்கி நசித்தது!
உயிரை உருக்கும் இயற்கையில் தோன்றிய
உண்மை வாத்தியக் கருவிகள் ஊமையாய்
செயற்கை இரைச்சலுள் சேடம் இழுத்தன!
சிந்தை செவி இரணம் ஆறா திருக்குது!
குயிலின் கூவலை, கிளிகளின் பேச்சினை,
குழல் செய் மாயத்தை, உடுக்கொலித் தாலாட்டை,
வயற் கதிர்களை வருடிடும் தென்றலின்
வார்த்தையை, சந்தக் கவிதைகள் சிந்திடும்
இயல்பு இலயத்தை, தேவாரப் பண்களை,
இரையும் கடலின் இசையை, பரவியே
உயிர் தொடும் நாதச் சங்கீத கானத்தை,
உறுக்கும் நவீனத்தின் கதறல்!என் செய்குவோம்?