தமிழரசி

நிமிர்ந்துதான் நின்றிருந்தாள்
நிலத்தில் தமிழரசி!
அமைதியும் போரும் அவளை அலைக்கழித்த
பொழுதும் சவாலையெல்லாம்
புன்னகையால் சாய்த்து…இரு
விழியில் ஒளிததும்ப
மணிமகுடம் துலங்க
நிமிர்ந்துதான் நின்றாளெம் நிலத்தில் தமிழரசி!
அமைதியும் போருமென
அலைக்கழித்த அவள்வாழ்வில்
போர்மட்டும் பூதமாய்
பிடித்தவளை கௌவிற்று.
பூதத்தின் கூர்நகங்கள் அவளைப்
பிறாண்டிற்று.
பூதத்தின் வேட்டைப்பல்
அவள்கழுத்தில் பதிந்திற்று.
பூதத்தின் சவுக்குவால்
உடலைஇரணம் ஆக்கிற்று.
பூதத்தின் வெறிக்கூச்சல்
அவளைப் புரட்டிற்று.
அவளோ தடுமாறி அடிபட விழுந்தபோது
அவளின் மணிமகுடம்
ஐந்தாறு தரஞ்சுழன்று
தெருவில் இரத்தச் சகதிக்குள்
தெறித்தெவரும்
தேடுவார்கள் அற்றுச் சிலநாள் கிடந்திருக்க
‘அமைதிமட்டும் தோன்றிற்றென்று’
அசரீரி கிளம்பிற்று.
அவளின் இரணங்கள் அவளின் தழும்புகள்
அவளினது காயங்கள் அவளின் சுகயீனம்
எதுவுமே சரியாக
மாறாத ஒருபொழுது,
அவளோடிருந்த சேய்கள்
அடுத்தவேளைச் சோற்றுக்கு
அழுதபோது…கண்ணீர் அகலா திருந்தபோது,
‘அமைதிமட்டும் தோன்றிற்று’
என்றெழுந்த அசரீரி
எங்கெங்கோ இருந்தவரை எல்லாம் உசுப்பிற்று.
துன்பத்தில் துணைநிலாது
எங்கோ சுகம்சுகித்தோர்…
வசதிகளால் வாய்ப்புகளால்
வாழப் பழகியவர்…
அடிக்கின்ற காற்றோடே அள்ளுண்டு போனவர்கள்…
எதைவிற்றும் பெரும் ‘போகம்’
தேடி அலைந்தவர்கள்…
என்று எங்கோ இருந்தவர்கள்
ஏட்டிக்குப் போட்டியாக
வந்து குவிந்தார்கள்!
வலுக்கெட்டுக் காயங்கள்
ஆறா அபலைகளாம் அவள்சேய்கள்
மீதேறி
தாங்கள் அவள் சேய்களெனத்
தம்பட்ட மடித்தார்கள்!
இன்று இரத்தம் காய்ந்த தரையில்
புழுதிமூடி
கிடக்குமவள் மணிமகுடம் தன்னையே
எப்படியும்
எடுத்துத்தாம் அணியத் துடித்து
தமக்குள்
அடிபட்டுப் பலர் அவளை
அசிங்கமாக்க வருகிறார்கள்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply