ஆயிரம் வருடங்கள் யாருமே வாழ்ந்ததில்லை!
வாழும் சிலநாளில்
மனிதமோங்க வாழ்வதில்லை!
வாழ்வு மிகச்சிறிது.
மணித்துளியிற் கணக்கிட்டால்
இவ்வளவா வாழ்வு ? என எழும்பும்
பதட்டம் ஐயம்.
இவ்வளவே வாழ்க்கை எனினும்
இதற்குள்ளும்
எத்தனை பிரச்சனைகள்
எத்தனை சச்சரவு,
நானென்ற அகம்பாவம்,
எனதென்ற சுயநலங்கள்,
கோபம் பகையுணர்ச்சி,
கொடுமைசெய்யத் தயங்காமை,
நேசம் மறத்தல்,
நிழலாக நில்லாமல்
நாளும் நெருப்பாயே
நாற்திசையை எரித்திடுதல்,
கோடி முரணைக் குவித்து
உயர்வுதாழ்வை…
நாளும் வெறுப்பை…
நலியாத வன்மத்தை…
பேணி அயலவனைப் பிணமாக்கி
அனுசரித்து
வாழா வரட்சியுடன்
வாழ்வை என்றும் பாலையாக்கல்,
ஓர்குரலில் ஓர்கருத்தில்
ஒற்றுமையாய்ச் சேராமல்
பேதம் பெருக்கல்,
பிளவுகளை நிரப்பாமல்
வாதம் வளர்த்தே வரலாற்றைப் பாழாக்கல்,
இலாபம் எதனிலும் பார்த்து
இறுதியிலே
ஏதும் சுவறா இறுமாப்போ டிறந்திடுதல்,
பிறப்பின் இயல்பைப் பின்பற்றாச்
செயற்கையான
வெறியால்…பிற உயிரை
உய்யவிடா தழித்து…
உறுக்கி எவரையும்
உயரவிடா தொழித்து…
இறுதியிலே அர்த்தங்கள் ஏதுமற்றுச்
சாம்பலாதல்,
என்று…வழமையான
இயற்கை சுற்று வட்டத்தை
நன்குணர்ந்தும்
நாமும் நலிந்தழிவோம் உய்வதில்லை!
ஆயிரம் வருடங்கள்
யாருமே வாழ்ந்ததில்லை!
வாழும் சிலநாளை
மனிதமோங்க வாழ்வதில்லை!