பாதாதி கேசமும் கேசாதி பாதமும்
பாடிடப் புலவருண்டு.
பாலான வேகமும் பருவத்தின் தாகமும்
பாவாக்க கவிஞர் உண்டு.
போதையை போத்தலை புணர்வினைப் பாடவும்
‘புதுக் கவிராயர்’ உண்டு.
பொருளற்ற நடிகையின் புகழினைப் பாடிடும்
பொருள் கொண்ட பொடியளுண்டு.
ஏதேனும் புரியாத இழவைக் கவியென்று
எழுதும் ‘இசக்’ கார ருண்டு.
இருண்மை, ஒத்திசைவின்மை, கொண்டு நாம் தலைபிய்க்க
இயற்றும் நவீனருண்டு.
நீதியை, வாழ்வின் நிஜத்தை, யதார்த்தத்தை,
நெருக்கடி, பொய், புரட்டை,
நேர்மையாய்ப் பாடி ஊர் வெம்மையைப் போக்கும்
நிழற்கவி யாரு இங்கு?
ஆயிரம் புலவர்கள், ஆயிரம் பாவலர்,
ஆயிரம் பாவேந்தர்கள்,
ஆயிரம் புதுக்கவி யரசர், நவீனத்தின்
அடி முடி கண்ட ‘பெரியர்’,
ஆயிரம் கலைஞர்கள், அதை விடப் பேச்சாளர்,
அறிஞர்கள், ஞான நிலையர்,
ஆயிரம் நின்றென்ன…? அவர்களால் வாழ்வர்த்தம்
அங்குலம் மாறியதுவா?
காயாக நின்ற நம் வாழ்க்கையும் வெம்புதே
கனியவைத்தவருள்ளரா?
கண்ணீரில் மூழ்கும் யதார்த்தத்தைப் பாத்தோணி
கரைசேர்த்துமே விட்டதா?
காயங்கள் ஆற்றியே கவலைகள் தீர்த்துமே
கருணை நிம்மதி தந்ததா?
கருகாமல் உயிர்க்குலம் காத்ததா? கவிக்குரல்…
கடவுளின் தூதல்லவா…?
உண்மையைப் பாடு, உழைப்பினைப் பாடு, உன்
உறவினைப் பாடு கவிஞா!
உன்நிலம், உன்மொழி, உன்மத, உன்இன
உறுதியும் பாடு புலவா!
உந்தன் பரம்பரை, உந்தன் மரபுகள்,
உன்புகழ் பேசு அறிஞா!
உந்தன் விழுமியம், உந்தன் தனித்துவம்,
உன் இயல்பெழுது பொடியா!
உன் நன்மை தீமையை, உன் இன்ப துன்பத்தை,
உன்வெற்றி தோல்வி தன்னை,
உன் இடர் துயர்களை, உன்சுயச் சிதைவினை,
உன் விருப்பேக்கம் தன்னை,
உன் எழில், நிழலினை, உன்குறை தவறினை,
உன்னத இலட்சியத்தை,
உன் வழி, வாழ்வினை, பொய் போலிமை விட்டு
உரை கவி பேச்சில்…எழடா!