காலச் சதி

தடுப்பு அணைகளினைத்
தம் இஷ்டம் போல் அடித்து
உடைத்துப் பெருக்கெடுக்கும்
ஊரெல்லாம் தொற்றாறு!
எங்கள் திசைகளின் இண்டிடுக்கு
மூலை முடுக்கு
எங்கும் பரவி எழுச்சியுறும் ‘தீநுண்மி’!
கால வெளியிலின்று
கடுகி வந்த ‘கிருமி – மந்தை’
மேயுதொரு ஆண்டின்மேல்…
கடிபடாது மிஞ்சியுள்ள
நாம்…புல்லாய்…
நாளை யார் மேயப் படுவோமோ?
சோதிக்கப் பட்டவரில் தொற்றுறுதி தான் பெரிதாய்!
சோதிக்கப் படாதோரில்
தொற்றுக்கே வாய்ப்பதிகம்!
சோதித்தால் அனேகமாகத்
தொற்றோடே எல்லோரும்!
எண்ணிக்கை நோய்க்காவி எகிற,
சாவு…இரட்டை
எண்ணைக் கடந்துமூன்றை
எட்டியே ஆர்முடுக,
சடலங்கள் தகனத்திற் காகத் தவமிருக்க,
தொடர்ந்து எரித்து ‘எரியூட்டிகள்’ உருக,
சிகிச்சை நிலையச் சிறைகள் நிறைய,
வீடே
சிகிச்சைச் சிறைகளாக,
தேர்ந்த கடவுளரும்
உள்வீதி யோடு ஊர்காணா விழாக்களிலே
மெள்ள ஒதுங்க,
விசேஷங்கள் வைபவங்கள்
தள்ளிவைக்கப் பட,
“தனித்து ஒடுங்கி முடங்காட்டி…
அடக்கங்கள் செய்வதற்கும் ஆட்களற்ற
நிலைவரலாம்
உடன் செய்க ஏதும்” என
உணர்ந்தோர் குரல் அலற,
வைத்தியரும் தடுப்பூசி போட்டு மகிழ்ந்தவரும்
செய்வ தறியாது நோயில்
திகைத்துவிழ,
நாளை எவர்? மறுநாள் யார்? கிருமிக்கு ஆட்படுவார்?
யார் போவார் மூச்சிறுகி?
யார் மீள்வார் நாளை தப்பி?
யாரும் அறியா…அறிவியலின் உச்சத்தில்…
யாரும் துணைக்குவரா யதார்த்தத்தில்…
வாய் வயிறும்
வேறு வேறு என்ற விதி வழியில்…
நாம் நம்மைக்
காக்கும் வழி தெளிவோம்!
‘காலச்சதி’ வெல்வோம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply