நாளை என்ன நடந்திடும் என்பதை
நானும் அறியேன்…நீயும் அறிந்திடாய்!
சூழும் என்ன வகையில் துயர் என
தொடர்பில் நிற்பவர் கூடத் தெரிந்திடார்!
வாழ்வின் பயணங்கள் நீளுமோ? நிற்குமோ?
மனதில் ஏக்கங்கள் சேருமோ? தீருமோ?
பாழே மிஞ்சுமோ? பழையது மீளுமோ?
பலிக்குமோ கனா? யார் பதில்சொல்லுவார்?
இன்றைக் கனவுகள் மிக எளிதானது.
எம் நனவிடை தோய்ந்தும் பிறந்தது.
வென்று மேலும் விரிந்து விஞ்ஞானத்தின்
விஸ்வரூபங்கள் கண்டு விண் வெளிவரை
சென்று ஜெயிப்பது பற்றியல்ல அது!
திணறும் மூச்சைச் சீராக்கி… தூய்மையாம்
தென்றல் தன்னைச் சுவாசித்து…ஏதேனும்
தின்று குடித்தாலே போதும்… எனும் அது!
இன் நோய்ப் பரவல் கட்டுக்குள் நிற்கணும்.
இதால் வரும் இறப்பெல்லாம் முடியணும்.
இன்று பாதிக்கப் பட்டோர்கள் மீளணும்.
இப் பெருந்தொற்று பூமி விட்டோடணும்.
துன்பமற்ற வளி, நீர், உணவு, இல்,
சூழணும்! புவி உய்யணும்…எனும் கனா
இன்று வருகுது….இது நனவாகணும்!
இயற்கை கைதந்து மனிதத்தை மீட்கணும்!