நீ எல்லாம் பார்த்துக் கொள்ளு!
நீ வரும் தடைகள் போக்கு!
நீ எது சரியோ… செய்து
நிம்மதி அயலில் ஊற்று!
நீ… வேலால்…தொற்றி மாய்க்கும்
நிட்டூரம் வீழ்த்து! கண்முன்
நீ வராப் போதும் எங்கும்
நிறைந்துமே தொற்று நீக்கு!
உன்கொடி ஏறு துள்ளே!
உயிர்ச்சேய்கள் தவித்து நொந்து
வெந்துளார் வெளியே! வேலை
விழி காணாது இடியும் நெஞ்சே!
என்ன நாம் புரிந்த பாவம்?
இழவெலாம் மாழச் செய்யே!
உன் முகம் காண வேணும்
ஒரு வழி திறந்து வையே!
இப்படி… தொண்டர் அற்று
இதயத்தில் சுமப்போர் அற்று
அற்புதப் பவனி அற்று
ஆள் அரவம் தான் அற்று
எப்பவும் விழா நடந்த
தில்லை! ஏன் இந்தத் தீர்ப்பு?
சொப்பனம் தனில் என்றாலும்
சுற்றும் வேற் காட்சி காட்டு!
உனைமட்டும் நேர்தல் அன்றி
உனைக்கெஞ்சிக் கேட்டல் அன்றி
உனதருள், துணைக்கு ஏங்கி
உள்ளுக்குள் அழுதல் அன்றி
மனதுக்கு மருந்து ஏது?
வடிவேலா உன்மேல் பாரம்
தனைப் போட்டோம்; இடர்கள் மாற்று!
தடை தகர்; அணை…வா…மீட்டு!