நாளை, மறு நாளை,என்னதான் ஆகுமோ?
நல்லை நாயகனே அதைப் பார்த்திடு!
சூழ்ந்த துன்பம்..யாம் தொட்டுப் பரவாமல்
சூரழித்த வேலால் நீ மறித்திடு!
பாழ்படர்ந்துமே பக்கத் தயலுக்கும்
பற்றிடாது நீ காப்பரண் போட்டிடு!
வாழும் பிள்ளைகள் வயது முதிர்ந்தவர்
மலர்ந்திருக்கிறார்..மருந்து தெளித்திடு!
ஊரோ டொத்து உற்ற துயரிடை,
உயிரை வாட்டும் தொற்றுப் பிணியிடை,
யாருமே அவிழ்க்காத புதிரிடை,
‘யாவர் மூலமோ’ தேறா நனவிடை,
ஓர் தனிமையில் உற்ற நோய் தீரணும்.
ஒழிந்ததனோடு இப்பிணி ஓடணும்.
சேர்ந்த சுற்றங்கள் தீங்கின்றி மீளணும்.
தெய்வ வேல் துணை தந்தெமைக் காக்கணும்!
உன் அருள் ஒன்றே ‘தடுப்பு மருந்தும்’…ஓம்
உன் துணைமட்டும் எமக்கு மருத்துவம்.
நின் விழிச்சுடர் தாமெம் கவசமும்.
நின் கரவேலே துன்பம் சுடுவதும்.
அன்றும் ஆயிரம் இன்னல்கள் தீய்த்துமே
அரவணைத்த துன்மனம்; நல்லையில்
நின்றெண் திக்கையும் பார்க்கும் அறுமுகம்,
நெஞ்சின் சஞ்சலம் நீக்கி உதவணும்!