மாரடைப்பினால் மாண்டான் எனும் செய்தி
வந்ததெம் உயிர் வெந்து துடித்தது!
ஊர் உறவுகள் கூடிக் குவிவதும்…
ஒப்பாரிக் கென்று பெண்கள் திரள்வதும்…
வேறு ஆட்கள்….கிரிகை, சாமான், ஐயர்,
பெட்டி எடுத்தல், வெடி, பறை, வாழைகள்,
தோரணத்திற்குப் போவதும்… நின்றது!
‘சோதனை முடிவுக்கு’ ஊர் பொறுத்தது!
திடீரென வந்த சா அது என்பதால்
செய்ய வேண்டிய Antigen, PCR
முடிவில் தங்குமாம் மொத்தம்! “பொசிற்றிவாய்”
முடிவெழின்…உடல் பிணவறை சேர்ந்திடும்.
அடுத்தவர் காணா…மூடிய பெட்டியில்
அங்கிருந்து ‘எரியூட்டிக்குச்’ சென்றிடும்.
உடன் பிறந்தவர், பிள்ளை, துணை, யார்க்கும்
ஒரு முறை முகம் காட்டாதும் நீறிடும்!
விடை “ நெகற்றிவ்” என வந்ததன் பின்பே
மிச்சமான கிரிகை, சுடலை, பின்
‘எடுக்கும் நேரம்’, எவர்கட்குச் சொல்வது,
இத்தனை பேரோடு இருந்து …இறுதிச்
சடங்கு, பந்தம் பிடிப்பு, வாய்க் கரிசிகள்,
தகனம், காடாத்தும் சாத்தியம் ஆகுது!
விடை கிடைத்தது “நெகற்றிவ்” என…வீட்டில்
வைத்துக் கடைசியாய்ச் சுற்றமும் பார்த்தது!