மாசற விளக்கு ஏற்றி
மாலை,மாவிலை,பூ, சூட்டி
வாசலில் கும்பம் நாட்டி
வரவேற்புப் பாக்கள் மீட்டி
ஆசையாய் வடை,கற்கண்டு,
அவல், சுண்டல் படைத்து நீட்டி
ஆசி நீ தர நாம் ஏற்போம்!
அருள் மழை பொழிவாய் பூப்போம்!
மண்டகப் படியை நித்தம்
மனம்போல வைப்போம். நீ நின்
பொன் வீதி உலாவில் வந்தெம்
புதிர் தீர்த்து வாழ்த்து தற்காய்
கண்கவர் சோடனைகள்
கட்டுவோம். பிரசாதங்கள்
உன் அடியார்க்கும் தந்து
உன் தயை பெறுவோம். உய்வோம்!
இன்று நின் விழாவில்…’உள்ளே’
ஏகாந்தனாய் நீ சுற்ற,
உன்கடைக்கண் காணா தெங்கள்
உணர்வுகள் தவித்துக் கத்த,
மன்னனுன் வரவுக் கேங்கி
வாசலில் கும்பம் ஏற்றி
நின்று பார்த்துள்ளோம்! தொற்றும்
நெருப்புள் நாம் தனித்துக் காத்தோம்!
ஆள் அரவங்கள் அற்ற
அயல்; மொளனம் திரண்ட முற்றம்.
வாழ்வில் முன் காணாக் கோலம்.
மருமநோய் பெருகும் காலம்.
சூழலில் திருவிழாவின்
சுவைகளைப் பறிக்கும் சட்டம்.
ஊழ் வினைப் பயனா? வேலா
உடை..நீ இந் நோயின் கொட்டம்!
மனதினைத் துடைத்து, ஆங்கே
மண்டகப் படியும் வைத்து,
உனை அகம் அழைத்து, உள்ளக்
கண்ணில் உன் பவனி பார்த்து,
“நனவிடர் மாழ வேண்டும்
நல்லூரா உதவு” என்றோம்!
உனது வேல் ‘உள்ளே சுற்றி
புறத்துயர்’ ஓட்ட …நேர்ந்தோம்!