காலகாலமாய்க் கல்லாய்க் கிடந்தவா!
கண்ணை மூடியே என்றும் துயின்றவா!
சீலம் யாதெனத் தேறா தலைந்தவா!
தேசு யாவும் மறந்து உலைந்தவா!
சாலவே பெரும் பேர் புகழ் கொண்டதோர்
சந்ததி அதன் விழுதென வந்தும்…உன்
கோலம் கெட்டுக் குலைந்தவா…யாருக்கும்
குடை பிடித்துமே தாழ்ந்து தொலைந்தவா!
உந்தன் கொற்றம், உந்தன் கொடி குடை,
உன் அரண்மனை, அத்தாணி மண்டபம்,
உன் சிம்மாசனம், உந்தன் செங்கோல், எலாம்
உழுத்தன…காட்சிப் பொருளாய்க் கிடந்தன!
மந்திரக் கவி, கூத்து, பறை, இசை
மண்ணுளே புதையுண்டன…நீ இதைச்
சிந்தையாலும் நினையாத செம்மறிச்
சேயென் றிருக்கிறாய்…இன்றுமா மாறிடாய்?
உன் பெருமைகள் உனக்குத் தெரியலை.
உன் சிறப்புகள் நீயும் அறியலை.
உன் விழுமியம், உந்தன் தனித்துவம்,
உனது பாரம்பரியம், செழுமைகள்,
உன் மகத்துவம், நீயும் உணரலை!
உலகும் அயலும் உணர்ந்தும்…உனைமிகச்
சின்னவன் எனக் காட்ட….பழித்திட,
தேடுவாய் பிச்சை நீயும் திருந்தலை!
உன்னை நீ உணர், உன் புகழ் நீ அறி,
உன் செழுமைகள், தம்மை நீ கண்டெடு!
உன் சரித்திரம், உன் அடையாளங்கள்,
உன் சிறப்புகள், உன் காலடியின் கீழ்
உண்டவை தெளி; உன் மணி மாலையை,
உன் மகுடத்தைத் தேடி எடுத்தணி!
உன் மரபைப் புரி; “நீ பெரியனே…”
உன்னுள் உள்ள உன் பெருமைகள் காண்…இனி