கால நதியோரம் கால்கள் விளையாடும்
காயம் அதில் மூழ்கி முழுகும்.
காய்ந்து, உடல்மேலே காணும் கழிவெல்லாம்
கழுவிவிட நெஞ்சு முயலும்.
தோலில் படிந்தூறும் தோசம் தொலைத்தோட்டி
தூய்மை மனமென்று அடையும்?
சுட்டு எரித்தாலும் சூழ்ந்த பழிபாவத்
தொல் அழுக்கு தேங்கி வளரும்!
காடு மலையேறி காவடிகள் காவி
காத்தருள்க என்று தொழுதாய்.
கஞ்சியையும் விட்டு கட்டழகும் கெட்டு
“காண்பன் இனி முத்தி” உரைத்தாய்.
தேடி உனதுள்ளே தேங்கும் புதிர்த்தீமை
தீர்க்க முடியாதா அழுதாய்?
தேறு உள் அழுக்கோட தேகம் அது முத்தி
சேரும் வெளிவேசம் களைவாய்!
உள்ளமதற் குண்மை யோடு நட…உள்ள
ஊத்தை அதனாலே விழுமே!
உன்னை உணர், வேசம் தன்னை விடு, என்றும்
உன் சுயமே வெற்றி தருமே!
கள்ள மனமற்றால் கருணை மனம் பெற்றால்
கவலை பிணி எட்டி விடுமே!
காதல், இரக்கங்கள் காட்டு எவர் மீதும்
கடவுளொடு நீயும் நிகரே!