என் பெருமை!

மலடியல்ல எங்களின் மாதா!
என்றென்றும்
கலைகளெலாம் தேர்ந்த
கவிக்குழந்தைகள் தம்மை
அன்றிருந்து இன்றுவரை
அடுத்தடுத்துப் பெற்றபடி…,
தன்னழகை… மாறும் தலைமுறை
காலத்திற்கு
ஏற்ப உருமாற்றி…,
இயல்பு, உருவம், சிந்தனையில்
போற்றும் புதுமைகள் புகுத்தி…,
தன் சிறப்புகளை
என்றென்றும் வற்றா திருக்கவைப்பாள்!
“புவியில் மூத்த
தொன்மை மொழி இவளே” என்று
துணிந்து எங்கோ
இருப்பவரும் ஏற்க…இன்றுவரை
‘உயிர்ச்சாரம்’
பெரிதாக மாறாத பெற்றியுடன் வாழ்கின்றாள்!
ஐயாயிரம் ஆண்டு கடந்த
அவள் இளமைக்கும்;
மெய்யழகு குன்றா மிடுக்குக்கும்;
முதுமை தட்டாது
இன்றைய காலத்திற்கும் ஏற்ப
தனைப்புதுக்கிக்
கொண்ட குணத்திற்கும்;
குறையாச் செழுமைக்கும்;
அன்னவளின் ‘கருப்பை’ அருள் சுரக்கும்!
கவி மழலை
இன்றைக்கும்… காலத்தை இணைந்து
கலந்து பெறும்
அன்னவளின் கருவளமே
உலகின் முதல் அதிசயமும்!
தொல்காப்பியன் என்றும்,
தூய சங்கப் புலவரென்றும்,
வள்ளுவன் கம்பன் இளங்கோ,
தேவார மூலர்,
அருணகிரி, ஆண்டாள்,
அதற்குள் பல புலவர்,
பாரதி,
அவனின் பாட்டுப் பரம்பரை, நம்
ஊரில் உதித்த உயர்கவிகள்,
எனத் தமிழன்
வாழும் இடமெல்லாம்
மாபெரும் கவியரசர்
தம்மை இடையறாது
கருத்தரித்துப் பெற்றாள்…எம்
அம்மை…
மகவுகளால்…,அவரவரின் காலத்தில்
புழங்கிய மரபுகளால்…,
பொழிந்த புதுமைகளால்…,
இளமைகுன்றாத் தாரகையாய் என்றும்
ஜொலித்துலக
அழகியாய் ஒளிரும்
அவள் அழகுக் குயிரூட்டும்
கவிஞனென எனையும் கருதினாளே…
என்பதுதான்
எவர்க்கும் கிடைக்காத
எனது பெருமையென்பேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply