திட்டம்

எங்கள் கனவுகளை எங்கள் மகிழ்ச்சிகளை
எங்களது என்று
எஞ்சிய எம் புன்னகையை
எங்களது சேமிப்பை
எங்கள் கவிவரியை
எங்களது வாழ்வின் இயல்புகளை
எம்மிருப்பை
நோட்டம் விடுகின்றாய்!
எம்மனது நோகாமல்…
‘காட்டுங்கள்’ என்றவற்றை இரசிப்பவன்போல்
நோக்குகிறாய்!
சுற்றுலாப் பயணியைப் போல்,
புதுஇடத்தைப் பார்ப்பவன்போல்,
சற்று வியப்போடே தரிசித்தாய்!
‘இவையிவைகள்
என்ன’என ஐயங்கள்
இடைக்கிடை எழுப்பிநின்றாய்!
புன்னகைத்துப் புறப்பட்டாய்… போய்விட்டாய்!
‘வெறுமனே
இரசிகனாக மட்டும் இருப்பாயா நீ’ அறியேன்.
அதற்குமேற் சென்று…
ஏதோஓர் ஆதாயம்
பார்க்க இனிமுயல்வாய்
என உள் உணர்கின்றேன்.
ஒருவேளை எம்சொத்தை எப்படிக் கரைப்பதென்றோ…
இல்லையுன் சொத்தை
எப்படிஇங் கிறைப்பதென்றோ…
திட்டமிட்டு அதற்கான
செயல்வடிவம் ஆக்குதற்குக்
கட்டளை இடுவதற்கோ…
கட்டளை எதிர்பார்த்தோ
இப்போது நீ இருப்பாய்
இனியுனைநான் எதிர்கொள்வேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply